×

குதிரையாறு வனத்தில் புலிகள் திரியுது உஷாரு: பழநி அருகே கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு

பழநி: பழநி அருகே குதிரையாறு வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பது கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக வனக்கோட்ட பகுதியில் கடந்த மே மாதத்தில், கோடைக்கால புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. இவ்வனக் கோட்டத்திற்குட்பட்ட உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்களில் 34 சுற்றுகளில் இப்பணி நடந்தது. இச்சுற்றுகளில் 53 நேர்கோட்டுப்பாதைகள் அமைக்கப்பட்டன. இதன்படி திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே குதிரையாறு, ஆண்டிபட்டி வனப்பகுதிகளிலும் புலிகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது.புலி, சிறுத்தை மற்றும் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்டவைகளின் தடய அடிப்படையில் கணக்கெடுப்பு நடந்தது. தொடர்ந்து நேரடி கணக்கெடுப்பு, தாவரங்கள், மனித இடையூறுகள், குளம்பினங்களின் எச்சம் கணக்கெடுப்பு போன்றவை நடத்தப்பட்டன. இந்த கணக்கெடுப்பின் முடிவில் குதிரையாறு,  ஆண்டிபட்டி அடர் வனப்பகுதிகளில் புலிகள் நடமாட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக வனக்கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘‘குதிரையாறு, ஆண்டிபட்டி அடர் வனப்பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஒரு வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் இருந்தால் அங்கு இதர தாவர உண்ணி விலங்குகளான மான், கேளையாடு, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். வனப்பகுதியில் காட்டு விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுபோல் வனப்பகுதியில் போதிய பசும்புற்கள், தண்ணீர் போன்ற வசதிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக உயரதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.


Tags : Palani Cavalry ,Tiger ,census ,forest ,Discovery , Tiger-turned-Usharu, cavalry , discovery , census near Palani
× RELATED முதுமலையில் பருவ மழைக்கு முந்தைய...